குழந்தைகளுக்கு கல்வி கற்க தொடங்க ஏற்ற நாளாக விஜயதசமி!!
நவராத்திரி பூஜை என்பது விசேஷமானது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வருகிறது நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் வழிபட்டு பத்தாவது நாள், விஜயதசமியாக அம்பிகை அசுரனை அழிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.
பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.
சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில், ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.