1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்தியின்போது வைக்கப்படும் ஒன்பது படிகட்டின் மகத்துவம்!!

நவராத்தியின்போது வைக்கப்படும் ஒன்பது படிகட்டின் மகத்துவம்!!

நவராத்திரி விழா நாள்களில் பெண்கள் விரதமிருந்து, வீடுகளை அழகுபடுத்தி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவர். இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற அக்டோபர். 1ஆம் தேதி தொடங்குகிறது.


 

 
நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன் அன்னை ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ஆவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்தியில் இதில் லட்சுமி, சரஸ்வதி, சக்தி, தசாவதார பொம்மைகள், பெருமாள்-தாயார், பாண்டுரங்கன், மதுரா கிருஷ்ணன் மற்றும் மான், சிங்கம் போன்ற விலங்குகள், பறவைகள், உள்ளிட்ட பலவித பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.
 
நவராத்தியில் ஒன்பது படிகள் அமைத்து, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் எனது உருவத்தை செய்து, என்னை பூஜித்து வந்தால் அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று அம்பிகை கூறியிருப்பதாக தேவி புராணம் தெரிவிக்கிறது.
 
முதலாம் படி:
 
கொலு மேடையில் கீழிருந்து முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் கொலுவாக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.
 
இரண்டாம் படி:
 
இரண்டாவது படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற உயிர்களின் பொம்மைகளை கொலுவில் வைக்க வேண்டும்.
 
மூன்றாம் படி:
 
மூன்றாம் படியில் மூன்றறிவு படைத்த உயிரினங்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளை கொண்டு மூன்றாவது படியை அமைக்க வேண்டும்.
 
நான்காம் படி:
 
நான்காம் படியில் நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைத்து நான்காவது படியை அலங்கரிக்க வேண்டும்.
 
ஐந்தாம் படி:
 
ஐந்தாம் படியில் ஐந்தறிவு கொண்ட உயிர்களான மிருகங்கள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை வைத்து ஐந்தாவது படியை அமைக்க வேண்டும்.
 
ஆறாம் படி: 
 
ஆறாம் படியில் மனிதர்களுக்கு உரியது. எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். அத்தகைய ஆறாவது அறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளை வைத்து ஆறாவது படியை நிர்மாணிக்க வேண்டும்.
 
ஏழாம் படி:
 
ஏழாம் படியில் மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் கொண்டு ஏழாவது படியை அமைக்க வேண்டும்.
 
எட்டாம் படி:
 
எட்டாம் படியில் தேவர்கள், அட்டதிக்கு பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகளைக் கொண்டு எட்டாவது படியை அலங்காரம் செய்ய வேண்டும்.
 
ஒன்பதாம் படி:
 
ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள் ஆகிய தெய்வங்களையும், அவர்களின் நடுவில் நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும்.
 
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.