1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

விஜயதசமி வெற்றித் திருநாளில் குழந்தைகளுக்கு கல்வி தொடங்கும் வழக்கம்...!

நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகா நவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும்  விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிகத் தொன்மைக் காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள்.

 
இத் திருநாளில் (வித்தியாரம்பம் செய்தல்) ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தபனங்கள் ஆரம்பித்தல் போன்றன ஆரபிப்பதால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட  திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நன்னாள்.
 
விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான  உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும்  நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப்  பெரிய சிறப்பு.
 
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவி சகல சௌபாக்கியங்களையும் வழங்குவாள் என்பது ஐதீகம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் வழக்கத்தில் உள்ளது.