புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும் காரணிகள் என்ன...?

தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. இவைதான் ரத்தத்தில் இருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுகின்றன. இது தவிர, மேலும் பல பணிகளை சிறுநீரகம் செய்துவருகிறது.
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம்.
 
சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக  செயலிழப்பு ஏற்படுகிறது.
 
சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள்  சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். 
 
ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும்  உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும்.
 
தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். சிறுநீரகக் கற்கள்  ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
 
புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.