வயிற்றில் ஏற்படும் அல்சரை போக்கும் எளிய மருத்துவ குறிப்புகள்...!
அல்சர் மற்றும் அல்சரால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வாயு பிரச்சனையை சரிசெய்வது குறித்து நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
நாகரிக வாழ்க்கையில் உணவு முறைகள், அதிக பணிச்சுமை, இரவு பகல் பாராமல் உழைப்பது, தூக்கம் கெடுதல், கணினி போன்ற கதிர் வீச்சுக்களால் உடலில் ஏற்படும் மாற்றம், காலம் தவறி சாப்பிடுவது போன்றவற்றால் வயிற்றில் அல்சர் உண்டாகிறது.
தேவையானபோது உணவு சாப்பிடாமல் இருந்தால் அமிலம் தேங்கி அல்சர் ஏற்படுகிறது. பாதாம் பிசினை பயன்படுத்தி அல்சரை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பாதாம், நெய், பால், சர்க்கரை. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உருகியதும் காய்ச்சிய பால், சர்க்கரை, பாதாம் பருப்பு பொடி சேர்க்கவும். இதனுடன் ஊற வைத்திருக்கும் பாதாம் பிசினை சேர்க்கவும். இதை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர அல்சர் குணமாகும். குடல் புண்களை ஆற்றும். நல்ல உணவாக மட்டுமின்றி அமிலத் தன்மையை குறைக்கிறது.
வாயுவை அகற்றும். பாதாம் பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஜவ்வரிசியை பயன்படுத்தி நெஞ்செரிச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, தயிர், உப்பு. செய்முறை: வேகவைத்த ஜவ்வரிசி எடுக்கவும். இதனுடன் சிறிது உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து நன்றாக கலந்து தினமும் ஒருவேளை எடுத்துவர அல்சரினால் ஏற்படும் நெஞ்செரிச்சல் சரியாகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். ஜவ்வரிசி ஒருவகை கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஜவ்வரிசியை வேகவைத்து சாதம்போல் வடித்து குடித்துவர குடல் புண் ஆறும். குடலின் உட்புற சுவற்றில் ஏற்படும் அரிப்பை தடுக்கும். ஊட்டச்சத்து மிக்கது. அமிலத்தன்மை அதிகரிப்பதை தடுக்கிறது. சீரகத்தை பயன்படுத்தி அல்சரால் ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: சீரகம், நெய். செய்முறை: பாத்திரத்தில் நெய் விடவும். நெய் காய்ந்ததும் சீரகப் பொடி சேர்த்து காய்ச்சி தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை வேளைகளில் எடுத்துவர நெஞ்செரிச்சல், வயிற்றுவலி சரியாகும். உடல் உஷ்ணம் குறையும். வாயுவை வெளியேற்றும்.