நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள்....!!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்.
ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நாள்பட்ட சளி, சி.ஓ.பி.டி. எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
தொடர்ந்து சளி பிரச்சினையால் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி பருகி வரலாம். தினமும் இரண்டு முறை பருகி வந்தால் சளி இளகி வெளியேறும்.
பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகள் பெருகுவதற்கு சளிதான் வழிவகுக்கிறது. அதனை வெளியேற்றுவதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
சுவாச பயிற்சிகளை மேற்கொள்வது சளியை வெளியேற்ற உதவும். உடற்பயிற்சியும் கைகொடுக்கும். சுவாசத்தை அதிகரிக்க செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சளி இளகி வெளியேறும்.
ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாய் கொப்பளித்து வருவதும் நல்லது.
நீராவி பிடிப்பதும் சளியை விரட்டும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் மூலிகைகளையோ, ஆவி பிடிக்கும் மாத்திரையையோ போட்டு தலையை துணியால் மூடி நீராவியை முகத்தில் பிடிக்கலாம். நீராவியில் இருந்து வெளிப்படும் சூடான காற்றை சுவாசிக்கும்போது சளி இளகி வெளியேற தொடங்கும்.