1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இளநரையை மாற்றி முடியை கருப்பு நிறமாக மாற்ற உதவும் கரிசலாங்கண்ணி !!

கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிப் பொடியை ஒரு பருத்தியினால் ஆன துணியில் முடிச்சாக கட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து நுனி முடிச்சு மூழ்கும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் சில தினங்கள் வைத்திருந்தால் எண்ணெய் நல்ல கருப்பு நிறமாக வரும். பிறகு எடுத்து வடிகட்டி இத் தைலத்தை தினமும் தலைக்குத் தடவி வந்தால் இளநரை மாறிவிடும்.
 
கரிசலாங்கண்ணிச் சாறு 100 மில்லி, அறுகம்புல் சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி சேர்த்து காய்ச்சி தைலப் பதம் வந்ததும் வடிகட்டி  வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வந்தால் பொடுகு நீங்கிவிடும். கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம்  வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும். நரையும் மாறிவிடும்.
 
கரிசலாங்கண்ணி இலையை பல் துலக்கப் பயன்படுத்தினால், பற்கள் உறுதியாகும். ஈற்றில் உள்ள நோய் கிருமிகள் அழிந்து ஈறுகள் பலப்படும். தொண்டைச் சளி  வெளியேறி விடும்.
 
கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 500 மில்லி சேகரித்து ஒரு லிட்டர் பாலில் சேர்த்து 35 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து இக்கலவையில் சேர்த்து தைலமாய் எரித்து, பதத்தில் வடித்து வைத்துக் கொண்டு தலை முழுகி வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி விடும்.  நல்ல தூக்கம் வரும். கண் நோய்கள், காது நோய்கள் ஒற்றைத் தலைவலி முதலியன நீங்கிவிடும்.