ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உணவு உண்ணும்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு  எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் காக்கப்படும்.

 
 
உணவில் ஆறு சுவைகள் அதாவது இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். திட ஆகாரமாக இருந்தாலும் நீர் ஆகாரமாக இருந்தாலும் நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும்.  சுவை நாக்கால் உறிஞ்சப்பட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். சுவையாகவே இரைப்பைக்கு செல்லும் உணவு தான் நமது உடலுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.
 
திட, நீர் ஆகாரமாக இருந்தாலும் அதன் வெப்ப தன்மை அல்லது குளிர்ச்சி தன்மை நம் நாவிலே சமப்படுத்தப்பட வேண்டும். நம்  தொண்டைக்கு செல்லும்போது வெப்பமாகவோ குளிர்ச்சியாகவோ இருக்கக் கூடாது. வெப்பமாக சென்றால் இரைப்பையை  பாதிக்கும் குளிர்ச்சியாக சென்றால் மாரடைப்பை ஏற்படுத்தும்.
 
சாப்பிடும்பொழுது நமது கவனம் சிதறாமல் இருப்பதற்கு நமது கண்களை மூடி, உதட்டை மூடி உண்ணலாம். பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
முடிந்தவரை சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். கால்களைத் தொங்க வைத்துக் கொண்டோ, நின்றுக்  கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 
முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் (10 நிமிடமாவது) முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை  ஏற்பட்டால் (உணவில் காரமோ உப்போ அதிகமானால்) சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு  எதிரியாக கருதப்படுகிறது.
 
குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகோ அல்லது நன்கு பசித்த பிறகோ சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக்  குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதற்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை  படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும். மொத்தத்தில் நமக்கு பிடித்த உணவை பசிக்கும்போது ரசித்து ருசித்து உண்டால்  நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.