1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (17:17 IST)

திருநீற்றுப்பச்சிலை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா...?

Thiruneetru Pachilai
திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் கற்பூரவள்ளிச் சாறு சேர்த்து மேலே பூசிவர கருந்தேமல், தடிப்பு, அரிப்பு ஆகியவை குணமாகும். திருநீற்றுப் பச்சிலையை தீயில் வாட்டி சாறு பிழிந்து காதில் விட்டால் தீராத காது வலி குணமடையும்.


திருநீற்றுப்பச்சிலை வேர், துளசி வேர், அவுரி வேர், மிளகு, சித்தரத்தை, கணடங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து ஒன்று இரண்டாக நறுக்கி, நீர் விட்டு காய்ச்சிக் குடித்துவர எவ்வகையான ஜுரமும் குணமாகும்.

திருநீற்றுப்பச்சிலை விதையை நீரில் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து உட்கொண்டு வர, ஜுரம் வாந்தி ஆகியவற்றை குணமாக்கும். நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.

இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்சனைகள் சரியாகும். திருநீற்றுப் பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப் பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.

காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும். முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும். அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.

பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும். திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.