திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வாயுத் தொல்லை ஏற்படுவதற்கான காரணங்களும் தடுக்கும் உணவு முறைகளும்...!

செரிமானத்தின் போது குடலில் உண்டாகும் வாயு, எப்போதாவது வெளியேறுவது இயல்புதான். ஆனால் அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை  முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் காரணமாகவே வாயு  ஏற்படுகிறது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலத்தை வெளியேற்றுவது அவசியம். இல்லையெனில் மலம் வெளியேறாமல் நீண்ட நேரம் குடற்பகுதியில் தேங்கும். கூடுதல் நொதித்தல் காரணமாக நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறும். உணவுப்  பொருட்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாதபோதும் வாயு ஏற்படலாம்.
 
குடற்பகுதியில் வாழும் நலம் பயக்கும் பாக்டீரியாக்களின் அழிவும் வாயு ஏற்படுவதற்கு ஒரு காரணம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல்  எடுத்துக்கொள்ளப்படும் சில மாத்திரைகளின் விளைவாகவும் குடற்பகுதியில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியும் என்பதைக்  கவனத்தில் கொள்ளவும். சில நேரங்களில், சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகப் பாக்டீரியாக்கள் கூடும்போதும் வாய்வுப் பிரச்சனை  உண்டாகும்.
 
பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்கள், முட்டைகோஸ் போன்றவற்றில் இருக்கும் ராஃபினோஸ் உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாயுப் பெருக்கம் ஏற்படலாம். பருப்பு வகைகள், வாழைக்காய் போன்றவையும் வாயுவை உண்டாக்குபவை. சமைக்கும் போது அதிகளவில்  மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ளலாம்.
 
வாயுத் தொல்லை இருப்பவர்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றைச் சிறிது காலத்திற்கு ஒதுக்கி வைப்பது நல்லது. வாயு நிரப்பப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்கள், குடலில் வாயுவை அதிகளவில் சேர்ப்பதோடு வயிற்றுப் புண்களையும் உண்டாக்கும்.
 
வாயுவை தடுக்கும் உணவுகள்:
 
புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர்  சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். 
 
பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம். சித்த மருந்துகளில், இஞ்சித் தேன், இஞ்சி ரசாயனம், சோம்புத் தீநீர், ஓமத் தேநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனை அளிக்கும்.