ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2022 (14:27 IST)

கரிசலாங்கண்ணி மூலிகையில் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா..!!

Karisalankanni Tea
உடலின் இரும்புச் சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து போகும். இதனால் உடல் சோர்வடையும்.


இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங்கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்தச் சோகை நீங்கும்.

 கல்லீரல் பாதிப்பால் உடலில் பித்தம் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்துவிடுவதால் காமாலை நோய் உண்டாகிறது. கல்லீரல் பாதிப்பே உடலின் பாதிப்பாகும். கல்லீரலைப் பலப்படுத்த கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.

கரிசலாங்கண்ணியின் சமூலத்தை (இலை, வேர், காய், பூ) நிழலில் உலர்த்தி பொடித்து அதனை கஷாயம் செய்தோ அல்லது தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதிப்பு குறையும். தற்போது சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கரிசலாங்கண்ணி மாத்திரை கிடைக்கிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்த : இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது. இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.

கரிசலாங்கண்ணி மூலிகையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு 2, ஏலக்காய் 1 இவற்றை பொடி செய்து, கால் தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியுடன் கலந்தால் ஒரு கிளாஸ் டீத்தூள் தயார். கரிசலாங்கண்ணி பொடியுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்தால் மூலிகை டீ தயார். விருப்பப்பட்டால் பால் சேர்த்து கொள்ளலாம்.