பல்வலியை போக்கும் அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!
பல்வலி இருக்கும்போது, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.
பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல்வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.
பாகல் இலையை நன்றாக மென்று தின்றால் பல்வலி குணமாகும். மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.
இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால் பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும். பல்வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று திண்ணவும்.
ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும். வாகை மரப் பட்டையை எரித்து பொடியாக்கி பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல்வலி குணமாகும்.
மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்கவைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும். கருஞ்சீரகத்தை வினிகரில் வேகவைத்துக் கொப்பளித்தால் பல்வலி தீரும்.