வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்பாடு மிக்க குப்பைமேனி!!

குப்பைமேனி தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், சாதாரணமாக களைச் செடியாக பரவிக் காணப்படும். பூனைவணங்கி என்கிற மாற்றுப் பெயரும் வழக்கத்தில் உள்ளது. குப்பைமேனி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது.
தோல் நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில்  பூசிவர வேண்டும் அல்லது குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணி நேரம் ஊறவைத்து,  கழுவி வரலாம். 
 
குப்பைமேனிச் சாற்றை குடித்தால் சளி, இருமல் குணமாகும். நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும். குப்பைமேனி இலையை அரைத்து அதனுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சீழ், வீக்கம் மறும் கட்டிகள் மீது தடவினால் குணமாகும்.
 
குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200  மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
 
நாள்பட்ட புண்கள், விஷக்கடி ஆகியவைகளுக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துத் தடவினால் குணமாகும். குப்பைமேனி இலையுடன் இரண்டு பல் பூண்டு சேர்த்துப் பொடி செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் புழு நீங்கும்.
 
குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும். மேலும் குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
 
குப்பைமேனி இலைச்சாறு பல் நோய், தீக்காயம், வயிற்றுவலி, நமைச்சல், குத்தல், இரைப்பு வலி நோய், மூக்கில் நீர் வடிதல், கோழை  ஆகியவற்றைக் குணமாக்கும்.