வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (17:54 IST)

’அவசரநிலை காலத்தைவிட தற்போது நிலைமை மோசமாக உள்ளது’ - இயக்குநர் ராகேஷ் சர்மா

இந்திய திரைப்பட இயக்குநர் ராகேஷ் சர்மா, குஜராத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இனப் படுகொலையை மையமாக வைத்து ஃபைனல் சொல்யூஷன் [Final Solution] என்னும் திரைப்படத்தை எடுத்தார். அந்த திரைப்படம் தேசிய விருதையும் பெற்றது.
 

 
ஆனால், ஆட்சியாளர்கள் அத்திரைப்படத்தை இந்தியாவில் எங்கும் திரையிட அனுமதிக்கவில்லை. இத்திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் மத்திய அரசின் தணிக்கை வாரியத்திடம் இருந்து திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் குஜராத்தில் திரையிட்ட இடங்களில் எல்லாம் படத்தை ஓடவிடாமல் தகராறு செய்தனர்.
 
இந்நிலையில், ராகேஷ் சர்மா தனக்குக் கிடைத்த தேசிய விருதினைத் திரும்ப ஒப்படைத்திருக்கிறார்.
 
இந்நிலையில் இது குறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ராகேஷ் சர்மா கூறுகையில், ”மிகவும் பெருமைப்படத்தக்க அளவில் பெற்ற ஒரு விருதைத் திரும்ப ஒப்படைக்கும் மாபெரும் தியாகம்.
 
ஆனால் அதே சமயத்தில் நானோ அல்லது வேறு சிலத் திரைப்படத் தயாரிப்பாளர்களோ எங்களுடைய படைப்பாற்றலுக்காக, எங்களுடைய பேச்சுரிமைக்காக, பொதுவான சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கக்கூடிய சூழலில் நாங்கள் வைத்துக் கொண்டிருப்பதிலும் அர்த்தம் ஏதும் இல்லை.
 
அவ்வாறு நாங்கள் இருந்தால், ஆட்சியில் உயர்பீடத்தில் இருப்பவர்களின் அனைத்து மோசமான நடவடிக்கைகளையும் வாய்மூடிமவுனமாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகிவிடும். இத்தகைய நடவடிக்கை கல்புர்கியைக் கொல்வதை ஏற்றுக்கொள்வது என்பது மட்டுமல்ல, சகிப்புத் தன்மையற்ற சூழலை ஏற்றுக்கொள்வது என்பதுமாகும்” என்று கூறியுள்ளார்.
 
மேலும், “சினிமா என்பதே பன்முகத் தன்மையைக் கொண்டாடுதல் ஆகும். அனைவரும் சுதந்திரமாகப் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் அங்கே இடம் இருக்க வேண்டும். இன்றுள்ள நிலைமை, அவசரநிலைப் பிரகடனக் காலத்தை விட மோசமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.