பெயர், லோகோவை மாற்றியது ஜொமாட்டோ நிறுவனம்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான டொமேட்டோ நிறுவனம் தனது நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை மாற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பெயர் மற்றும் லோகோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உணவு டெலிவரி நிறுவனம் என்றாலே உடனே மக்களுக்கு ஞாபகம் வருவது ஜொமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள்தான். குறிப்பாக ஜொமேட்டோ நிறுவனம் தனது பெயரை கிட்டத்தட்ட கிராமம் வரைக்கும் கொண்டு சேர்த்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திடீரென இந்நிறுவனம் "எட்டர்னல்" என்று பெயர் மாற்றுவதாக அறிவித்து, புதிய லோகோவையும் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் பெயர் மாற்றத்திற்கு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் நடைபெற்றது. மேலும், இந்த பெயர் மாற்றத்திற்கு பின்னர் பங்குதாரர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் நிறுவன தலைவர் பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த புதிய பெயர் விரைவில் மக்களைச் சென்றடையுமா அல்லது பழைய பெயரையே மக்கள் தொடர்ந்து அழைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், பெயர் மாற்றம் மட்டுமின்றி மேலும் சில புதிய அறிவிப்புகள் விரைவில் வரும் என்றும், தனது சேவைகளிலும் சில மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் எட்டர்னல் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edited by Siva