தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த இளைஞர்.. உயிரை காப்பாற்றிய பிரியாணி..!
வறுமை காரணமாக தற்கொலை செய்யப் போவதாக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்த நிலையில் அவருக்கு பிரியாணி வாங்கி தருவதாக போலீசார் சமயோசிதமாக தெரிவித்து அவரது உயிரை காப்பாற்றிய சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.
கொல்கத்தாவில் வேலை இல்லை என்பதால் வறுமையில் வாடிய இளைஞர் ஒருவர் பாலத்தின் மீது ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இந்த மிரட்டல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தனக்கு வேலை இல்லை என்றும் தனது குடும்பம் நிதி நெருக்கடியால் தவித்து வருகிறது என்றும் எனவே தான் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். இதனை அடுத்து அந்த இளைஞரிடம் மெதுவாக பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அந்த நபருக்கு வேலை வாங்கி தருவதாக கூறிய போது அந்த இளைஞர் நம்பவில்லை.
இதையடுத்து உடனே உங்களுக்கு சாப்பிட பிரியாணி வாங்கி தருவதாக போலீசார் கூறியவுடன் அந்த நபர் பிரியாணி மீது உள்ள ஆசை காரணமாக கீழே இறங்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த நபருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டதாகவும் அவர் மீது எந்த விதமான வழக்கும் பதிவு செய்யாமல் அவருக்கு அறிவுரை கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva