ஏழு காதலிகளை சந்தோஷப்படுத்த திருட்டில் ஈடுபட்ட ரோமியோ


Murugan| Last Modified வியாழன், 18 பிப்ரவரி 2016 (16:21 IST)
தன்னுடைய காதலிகளை சந்தோஷப்படுத்துவதற்காக திருட்டில் ஈடுபட்ட ஒரு இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

 
 
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். இவர் ஒரு ரோமியோ. தனக்கு நிறைய காதலிகள் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக பல வழிகளிலும் முயற்சி செய்து 7 பெண்களிடம் காதல் வார்த்தை பேசி காதல் மன்னனாக வலம் வந்துள்ளார்.
 
காதலிகளை சந்தோஷப்படுத்த அவர்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்று நினைத்த ஓம்பிரகாஷ் திருட்டில் ஈடுபட முடிவெடுத்தார். செல்போன், பணம் போன்றவற்றை ஏராளமான இடங்களில் திருடினார். 
 
அதில் கிடைக்கும் பணம் மூலம் தன்னுடைய ஏழு காதலிகளுக்கும் நிறைய பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். ஏழு காதலிகளில் ஒரு +2 படிக்கும் மாணவியும் உண்டு. பேஸ்புக் மூலம் அந்த பெண்ணை மடக்கிய ஓம்பிரகாஷ், அவருக்கு சமீபத்தில் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
 
சமீபத்தில் எப்படியோ போலீசாரிடம் சிக்கிய அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் மேற்கண்ட விஷயங்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. குடும்ப சூழ்நிலை, வறுமை என திருடுவதற்கு காரணங்கள் கூறும் திருடர்கள் மத்தியில், ஆடம்பர வாழ்கைக்கு ஆசைப்பட்டும், தன்னுடைய ஏழு காதலிகளை சந்தோஷப்படுத்துவதற்காகவும் திருடிய அவரின் வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
 
அவரிடமிருந்து 17 செல்போன்கள், ரூ.4.5 லட்சம் பணம் ஆகிவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும், அவரிடம் பரிசுப் பொருட்கள் பெற்ற, அவரின் காதலிகளிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :