திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் யாரும் நீராட கூடாது: உபி முதல்வர் யோகி உத்தரவு..!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பக்தர்களிடம் திரிவேணி சங்கமத்தில் நீராட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கூட்ட நெரிசல் அதிகரித்து, பக்தர்கள் உயிரிழந்த நிகழ்வுகள் நடந்ததை தொடர்ந்து இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில், ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில், இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். நேற்று மட்டும் 4.64 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
இன்று (ஜனவரி 29), மௌனி அமாவாசை நாளாக இருப்பதால், ஒரே நாளில் 10 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மகாகும்ப நகரில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக 15 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. மேலும், 30-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் (பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், “பிரயாக்ராஜுக்கு வந்துள்ள அனைத்து பக்தர்களும், உங்களுக்கு அருகில் உள்ள கங்கை ஆற்றில் நீராடுங்கள். திரிவேணி சங்கமத்தில் செல்ல முயற்சிக்காதீர்கள். நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அனைத்து ஏற்பாடுகளிலும் ஒத்துழைக்க வேண்டும். எந்த விதமான வதந்திகளுக்கும் செவி சாய்க்க வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, பக்தர்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
Edited by Mahendran