ரவுடியை காதலித்து கைது செய்த போலீஸ்! – இப்படியும் ஒரு ட்ரிக்கா?
உத்தர பிரதேசத்தில் ரவுடி ஒருவரை பிடிப்பதற்காக அவரை காதலிப்பதாக பெண் போலீஸ் ஏமாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மஹோப்பா பகுதியில் பிரபல ரவுடியாக இருந்தவர் பால்கிஷண் சவுபே. கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தார் பால்கிஷண். போலீஸார் பல திட்டங்கள் போட்டு அவரை பிடிக்க முயன்றாலும் அவர் தப்பி சென்று வேறு பல குற்றங்களை செய்து வந்திருக்கிறார்.
இதனால் அவரை பிடிக்க போலீஸ் வித்தியாசமான யுக்தியை கையாண்டிருக்கிறார்கள். புதியதாக சிம் ஒன்றை வாங்கி அதன் மூலம் பெண் போலீஸ் ஒருவரை பால்கிஷணுடன் ‘ராங் நம்பர்’ போல் பேச வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பேசி கரைய வைத்த அந்த பெண் போலீஸ் பால்கிஷணை காதலிப்பதாக நம்ப வைத்துள்ளார்.
காதலில் மூழ்கிய பால்கிஷணை தன்னை சந்திக்க வேண்டுமானால் இந்த இடத்திற்கு வரவும் என ஒரு இடத்தை சொல்லி வர சொல்லியிருக்கிறார் அந்த பெண் போலீஸ். பால்கிஷணும் அந்த பெண்ணை பார்க்க ஆவல் கொண்டு அங்கு சென்றிருக்கிறார். ஏற்கனவே அந்த பகுதியில் பால்கிஷணின் வருகைக்காக தயாராக இருந்த போலீஸ் பால்கிஷணை மடக்கி கைது செய்திருக்கிறார்கள். காதலிப்பதாக நடித்து ரவுடியை பிடித்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.