1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (13:52 IST)

டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்..! உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு முறையீடு..!!

Delhi Water
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு தலை விரித்தாடும் நிலையில் அண்டை மாநிலங்களிலிருந்து தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
 
டெல்லி, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் அம்மாநிலங்களில் குடிநீர் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

ஒரு நாளைக்கு 2 முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  மேலும் தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
 
ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசு, டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை குறைத்து விட்டது எனவும் இதன் காரணமாகவே டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு குற்றம் சாட்டி உள்ளது.
 
இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து மேலும் ஒரு மாதத்துக்கு டெல்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்க உத்தரவிட வலியுறுத்தி ஆம் ஆத்மி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
இதற்கிடையே தலைநகரின் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண தவறிய ஆம் ஆத்மி அரசை கண்டித்து தலைமை செயலகத்தை பாஜகவினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.