வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 மே 2024 (16:32 IST)

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

Diesel Parotta
விதவிதமான உணவு வகைகளை பலரும் தேடி செல்ல தொடங்கியுள்ள நிலையில் சண்டிகரில் ஒரு உணவகத்தில் டீசலை பயன்படுத்தி பரோட்டா செய்ததாக வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சமீப காலங்களில் உணவு சார்ந்த யூட்யூப் சேனல்கள், இன்ஸ்டாக்ராம் பக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில் தெருவோரக்கடைகள் தொடங்கி ஸ்டார் உணவகங்கள் வரை சென்று அவற்றை வீடியோ எடுத்து போடுவது வைரலாகியுள்ளது. இதுபோன்ற வீடியோக்கள் மூலமாக வைரலாவதற்காக சில உணவகத்தை சேர்ந்தவர்களும் டான்ஸ் ஆடிக்கொண்டே சமைப்பது போன்ற சர்க்கஸ் வேலைகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், சாக்லேட்டில் முட்டை ஆம்லேட், ஐஸ்க்ரீம் ஆம்லேட் என சிந்திக்கவே முடியாத பல உணவு ஐட்டங்களை செய்து காட்டி மிரள செய்கின்றனர்.

அப்படியான ஒரு சம்பவம் சண்டிகரில் நடந்துள்ளது. சண்டிகரில் உள்ள சாலை உணவகம் ஒன்றில் ஒரு உணவு வ்லாக் செய்பவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதில் அந்த சமையல்காரர் பரோட்டாவை போட்டு அதில் ஒரு டின்னில் இருந்து டீசலை அள்ளி ஊற்றுகிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் இதுபோன்ற சமையல் செய்பவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டது டீசல் அல்ல என்றும், சாதாரண எண்ணெய்தான் என்றும், அந்த வீடியோவில் காட்டுவது போல தாங்கள் சமைப்பதில்லை, ஒரு யூட்யூப் உணவு வ்லாக் செய்பவருக்காக அப்படி செய்தோம் என உணவகம் விளக்கமளித்துள்ளது. அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக ஃபுடிசிங் என்ற அந்த யூட்யூப் பேர்வழி அப்படி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மன்னிப்பு கேட்டுள்ள அவர், பரபரப்புக்காக இனி இதுபோன்ற விஷயங்களை செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K