உச்சி வெயிலில் 10 நிமிஷம் உக்காந்தா கோரோனா போயிடுமா?? – சுகாதாரத்துறை அமைச்சர் சர்ச்சை பேச்சு!
கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் ஒருவரே சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸைவிட வதந்திகள் வேகமாக பரவுவதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது போலவே கோழி சாப்பிட்டால் கொரோனா வரும், கோமியம் குடித்தால் கொரோனா வராது என சமூக வலைதளங்களில் வெளியான உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சௌபே பேசியபோது “மதியம் 11 மணி முதல் 2 மணி வரை சூரியன் மிக வெப்பமாக இருக்கும். அப்போது 10 முதல் 15 நிமிடங்கள் வரை வெயிலில் நின்றால் அதனால் விட்டமின் டி அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி வைரஸ் அழிந்து விடும்” என பேசியுள்ளார்.
ஏற்கனவே கொரோனாவை எதிர்க்க கோமியம் பருகும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மத்திய இணை அமைச்சரே இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அமைச்சருக்கும் செல்லுபடியாகுமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.