வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 4 நவம்பர் 2015 (15:11 IST)

மின்சார கம்பியை தொட்டதால் சிறுவன் பலி : ரயிலின் மேற்கூரையில் செல்பி எடுத்த போது பரிதாபம்

ரயிலின் மேற்கூரையில் செல்பி எடுக்க முயன்ற சிறுவன், அங்கிருந்த உயர் மின்சாரம் பாயும் கம்பியை தொட்டதால் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் மும்பையில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மும்பையில் உள்ள சேவியர் உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் சாகில் சந்திரகாந்த் எஸ்வர்கர். இவன் கடந்த திங்கள் கிழமை மதியம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளான்.
 
ஆனால் ரயில் நிலையம் சென்ற அவன், ரயிலின் மேற்கூரையில் ஏறி செல்பி எடுக்க முயன்ற போது, 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் மின்கம்பியை எதிர்பாரா விதமாக தொட்டதால் தூக்கி விசப்பட்டான். உடலில் 80 சதவிகிதம், தீக்காயத்தால் பாதிக்கப்பட்டான். 
 
மயக்க நிலைக்கு போவதற்கு முன் அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் தனது தாயின் மொபைல் எண்னை கூறியுள்ளான். சாகிலின் தாய்க்கு உடனே தகவல் தரப்பட்டது.  சிறுவனை ராஜ்வாடி மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் அன்று மாலை 5.30 மணியளவில் சிறுவன் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி யாரேனும் இருக்கிறார்களா என்று மும்பை காவல்துறை விசாரித்து வருகிறார்கள். மேலும் சிறுவன் வைத்திருந்த செல்போனை போலிசார் தேடிவருகிறார்கள். செல்பி எடுக்கும் போதுதான் அவன் தூக்கி விசப்பட்டதால், அந்த செல்போன் கிடைத்தால் போலிசாருக்கு இன்னும் சில தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.