குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!
குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் காரணத்தினால் குற்றாலம் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருகிறது.
குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் அதிக அளவு தண்ணீர் வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை நீர்வரத்து சற்று குறைந்தது.
இதனால் இன்று குளிப்பதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று மீண்டும் அதிக அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஜாலியாக அருவியில் குளிக்கலாம் என்று வந்த சுற்றுலா பயணிகள் அருவியை வேடிக்கை பார்த்துவிட்டு சோகத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Edited by Mahendran