1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (17:50 IST)

திகார் சிறையில் பலாத்காரம்: கெஜ்ரிவாலுக்கு கடிதம்

தெற்காசியாவில் பெரிய ஜெயிலான டெல்லி திகார் சிறையில் பெண் மருத்துவர் ஒருவர் சிறை குற்றவாளியால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சிறை மருத்துவமனையில் பணிபுரியும் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவர் சமீபத்தில் டெல்லி மகளிர் ஆணையத்திடம் தான் சிறை கைதி ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்ததின் அடிப்படையில், திகார் சிறையில் எவ்வளவு பெண் மருத்துவர்கள், பெண் நர்சுகள் மற்றும் பெண்கள் பணிபுரிகின்றனர், அவர்கள் அங்கு நியமிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன? போன்ற விவரங்களை தாக்கல் செய்யுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
 
இதனையடுத்து திகார் சிறை மருத்துவமனையில் பணிபுரிந்த 26 பெண் நர்சுகளை, தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு மாநில சுகாதார துறை இடமாற்றம் செய்து, 26 ஆண் நர்சுகளை அவர்களுக்கு பதிலாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
இட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நர்சுகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில், ’தெற்கு ஆசியாவில் பெரிய ஜெயிலான திகார் சிறையிலேயே நர்சுகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் வேறு எங்கு பாதுகாப்பு கிடைத்துவிடப் போகிறது? என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள், தங்கள் இடமாற்ற உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும்” என டெல்லி அரசை வலியுறுத்தியுள்ளனர்.