1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (13:09 IST)

புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.! உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு..!!

supremecourt
காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகித்து வருகிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இதில் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் அண்மையில் ராஜினாமா செய்தார்.  தற்போது இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவிகள் காலியாகவுள்ளது.
 
காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு புதிய ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய மூவர் குழு வரும் 15-ம் தேதி டெல்லியில் கூடி புதிய தேர்தல் ஆணையர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
இந்நிலையில் காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில்  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.   புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.