தெலுங்கானா சுரங்கத்திற்குள் சிக்கிய 8 பேர் நிலை என்ன? மீட்பு பணிகள் தீவிரம்
தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த சுரங்க விபத்தில் எட்டு பேர் சிக்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்க மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாகர்கர்னூல் என்ற மாவட்டத்தில் ஸ்ரீசைலம் பகுதியில் கால்வாய் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சுரங்கத்திற்குள் 14 கிலோமீட்டர் தொலைவில் திடீரென மேற்பகுதி இடிந்து விழுந்ததால், இரண்டு பொறியாளர்கள் மற்றும் ஆறு தொழிலாளர்கள் என மொத்தம் எட்டு பேர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியை தெலுங்கானா மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று இரவு முதல் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுவரை எட்டு பேரின் நிலை குறித்து தகவல் கிடைக்காத நிலையில், அவர்களை மீட்க மிகுந்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 11 கிலோமீட்டர் முதல் 13 கிலோமீட்டர் வரை தண்ணீரால் சூழப்பட்டுள்ளதாகவும், அந்த நீரை அகற்றும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva