திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (09:52 IST)

கர்ப்பவதி என்றும் பாராமல் ஆசிட் குடிக்க வைத்து கொலை! – கணவரை தேடும் போலீஸ்!

தெலுங்கானாவில் கர்ப்பமாக இருந்த பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கணவனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வரதட்சணை கொடுமையால் பெண்கள் பலர் இறந்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது, தற்போது அப்படியானதொரு சம்பவம் தெலுங்கானாவிலும் நடந்துள்ளது.

தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள ராஜ்பேட் தண்டா பகுதியை சேர்ந்தவர் தருண். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அடிக்கடி கல்யாணியிடம் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கல்யாணி கர்ப்பமாகியுள்ளார். ஆனாலும் அவரை தருண் குடும்பத்தார் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் கல்யாணியை மூர்க்கமாக தாக்கிய தருண், கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

தருண் அடிப்பது தாங்க முடியாமல் கல்யாணி ஆசிட்டை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வலி தாங்காமல் அவர் அலறவே தருண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி கல்யாணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான கணவர் தருணை தீவிரமாக தேடி வருகின்றனர்.