புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:23 IST)

”சிதம்பர ரகசியம் என்பது முதுமொழி ஆனால் தற்போது??…” சிதம்பரத்தை கிண்டல் செய்யும் தமிழிசை

ப.சிதம்பரம் மீதான வழக்கு குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து தற்போது ப.சிதம்பரம் எங்கே என தெரியாத நிலையில், பல அரசியல் தலைவர்கள் இது குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் இப்படிப்பட்ட வழக்குகளை சந்திக்க நேரும் என்பதற்கு முன்னுதாரணமாக சிதம்பரம் திகழ்கிறார். ஒரு முன்னாள் நிதியமைச்சர், சட்டம் பயின்றவர், சி.பி.ஐ. சம்மன் அனுப்பியும் நியாயமான முறையில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

”சி.பி.ஐ அதிகாரிகள் வீட்டிற்கு சென்றது சரியா? என்று கேள்வி கேட்கும் எதிர்கட்சியினர் டெல்லியில் இருந்து வீட்டிற்கு வராமல் இருப்பது சரியா என்பதற்கு பதில் சொல்லவேண்டும்” எனவும் கூறியுள்ளார். மேலும் சிதம்பர ரகசியம் என்பது பழமொழி, ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பது இன்றைய மொழி என்றும் ப.சிதம்பரம் காணாமல் போயுள்ளதை கேலி செய்யும் வகையில் தமிழிசை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.