பெண்ணின் 'சடலத்துடன்' உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை இல்லை: உறுதி செய்த உச்சநீதிமன்றம்
பெண்ணின் சடலத்துடன் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வராது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 21 வயது பெண்ணை கொலை செய்து, சடலத்துடன் பாலியல் உறவு கொண்டதாக ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்டவரின் கொலை குற்றத்தை உறுதி செய்தனர். ஆனால், அதே நேரத்தில், சடலத்துடன் உடலுறவு கொண்டதற்காக பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஒரு பெண்ணின் இறந்த உடலுடன் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றம் ஆகாது என்றும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். இதனை எதிர்த்து, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து, "ஒரு பெண்ணின் இறந்த உடலுடன் உறவு கொள்வது பாலியல் குற்றம் அல்ல. இது 'நெக்ரோபிலியா' என அழைக்கப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இதை குற்றமாக கருத முடியாது" என்று தெரிவித்தனர்.
ஆனால், இதற்கான தனித்துவமான சட்டம் உருவாக்குவது பாராளுமன்றத்தின் கடமை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.