வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (16:00 IST)

செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் : மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விவகாரத்தில்,  பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.


 

 
நொய்டாவை சேர்ந்த நரேஷ் சந்த் குப்தா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் “செல்போன்கள் மற்றும் செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் பொதுமக்களுக்கும், விலங்குகளுக்கும் ஏராளமான உடல்நல கோளாறுகள் ஏற்படுவதாக  விஞ்ஞான புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன.
 
கதிர் வீச்சின் மூலம், தலைவலி, தூக்கமின்மை, மயக்கம் உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து உயிருக்கு அச்சுறுத்தலான மூளை கட்டிவரை பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், தேனீக்கள், குருவிகள் உள்ளிட்ட பறவைகள்  மற்றும் விலங்குகளும் அதிகம் பாதிக்கும். இதனால் அதன் எண்ணிக்கையும் குறையும் அபாயம் உள்ளது. 
 
எனவே, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவை கணிசமாக குறைத்து, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக வெளிநாடுகளில் பின்பற்றப்படும் கடுமையான விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
முக்கியமாக, குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சந்தைகள் மற்றும் மக்கள் நிறைந்த இடங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் செல்போன் கோபுரங்கள் நிறுவ தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே இப்படி நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும். அத்துடன், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அதை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த வழக்கு பற்றி தீர்ப்பளித்த வழக்கறிஞர்கள், இதுபற்றி பதில் அளிக்குமாறு, மத்திய தொலைத்தொடர்பு துறை, நொய்டா நிர்வாகம், நொய்டாவில் செல்போன் கோபுரங்கள் அமைத்த ஒரு தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.