1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 15 மே 2015 (12:38 IST)

சுனந்தா புஸ்கர் கொலை வழக்கு: சசி தரூரின் டிரைவர் உட்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு

சுனந்தா புஸ்கர் கொலை வழக்கில், விசாரிக்கப்பட்ட சசி தரூரின் கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் பொய் சொல்வதாக டெல்லி சிறப்பு புலனாய்வு குழு சந்தேகம் எழுப்பியுள்ளதால், அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
சுனந்தா புஸ்கர் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட சசி தரூரின் கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் பொய் சொல்வதாக டெல்லி சிறப்பு புலனாய்வு குழு சந்தேகம் எழுப்பியுள்ளது.
 
இதனால் அம்மூவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் புலனாய்வு குழு அனுமதி கோரியுள்ளது.
 
சசிதரூரின் வீட்டு உதவியாளர் நரெய்ன் சிங், கார் ஓட்டுநர் பஜ்ரங்கி மற்றும் சசி தரூரின் நண்பர் சஞ்சய் தேவன் ஆகியோர் பொய் சொல்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சுனந்தா புஸ்கரின் மரணத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், பல்வேறு முரண்பாடுகள் பற்றிய கேள்விக்கு சரியான பதிலை அளிக்க மறுப்பதாகவும் இம்மூவர் மீதும் புலனாய்வு குழு குற்றஞ்சாற்றியுள்ளது.
 
சுனந்தா புஸ்கரின் மரணத்திற்கான காரணம் இந்த மூவருக்கும் தெரியும் என்று உறுதிபட கூறியுள்ள புலனாய்வு குழு, 2014 ஆம் ஆண்டு, ஜனவரி 17 ஆம் தேதி சுனந்தா புஸ்கர் தங்கியிருந்த அறை எண் 345 ஆல் இரவு 7 மணிக்கு ஏன் மின்தடை ஏற்பட்டது என்ற கேள்விக்கு 3 பேருமே அமைதியாக இருந்ததாக கூறியுள்ளது.
 
மின்தடைக்கு பின்னர்தான் சுனந்தா புஸ்கர் மரணம் குறித்த செய்தி வெளியே கசிந்தது. அப்போது சசிதரூருடன் இம்மூவர் தான் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதைத் தொடர்ந்து, இம்மூவரையும் வரும் 20 ஆந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் சர்மா சம்மன் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.