வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 11 டிசம்பர் 2014 (10:20 IST)

தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் ஆகாது: சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு

தற்கொலை முயற்சிக்கான இந்திய தண்டனைச்சட்டப் பிரிவு 309, நீக்குவதற்கு 18 மாநிலங்களும், 4 யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பரத்திபாய் சவுத்ரி கூறியுள்ளார்.
 
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றது.
 
அந்த வகையில் தற்போது, தற்கொலை முயற்சிக்கான இந்திய தண்டனைச்சட்டப் பிரிவு 309, நீக்கப்படுகிறது. இந்த முடிவுக்கு 18 மாநிலங்களும், 4 யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்துள்ளன.
 
இது குறித்து, டெல்லி மேலமையில், மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பரத்திபாய் சவுத்ரி, கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
 
அந்த பதிலில் கூறியிருப்பதாவது:-
 
இந்திய சட்டக்கமிஷன் தனது 210ஆவது அறிக்கையில், தற்கொலை முயற்சிக்கான இந்திய தண்டனைச்சட்டப் பிரிவு 309ஐ சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளது.
 
சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் பிரச்சினை என்பதால் சட்டக்கமிஷனின் சிபாரிசு தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்து கேட்கப்பட்டது.
 
இதில் 18 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 309ஐ சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கி விட ஆதரவு தெரிவித்துள்ளன.
 
மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள ஆதரவினை அடுத்து, இந்த சட்டப்பிரிவை நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 
தற்கொலை முயற்சி குற்றத்துக்கு தற்போது ஓராண்டு காலம் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.