வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 16 மார்ச் 2015 (07:31 IST)

'சுப்ரமணியன்சாமி அசாமில் நுழைய தடை விதிப்போம்' : தருண் கோகாய் எச்சரிக்கை

சுப்ரமணியன்சாமியின் சர்ச்சைக்குறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'தொடர்ந்து அவர் இதுபோல் பேசினால், அவர் அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம்'  என்று அம்மாநில முதலமைச்சர் தருண் கோகாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சாமி அண்மையில் அசாம் மாநிலத்திற்கு பயணம் செய்தார்.
 
அங்கு அவர் ஒரு பல்கலைக்கழக விழாவில் பேசுகையில், "மசூதிகளும், தேவாலயங்களும் பிரார்த்தனை செய்வதற்காகக் கூடும் கட்டடங்கள் என்பதால், அவற்றை இடிக்கலாம், சவூதி அரேபியாவில் கூட மசூதிகள் இடிக்கப்படுகின்றன; ஆனால், கோவில்களில் தெய்வங்கள் குடியிருப்பதால், அவற்றை இடிக்கக் கூடாது" என்று கூறினார்.
 
இந்த சர்ச்கைக்குறிய கருத்துக்கு, பல்வேறு மத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
 
இந்நிலையில், இது குறித்து அசாம் முதலமைச்சர் தருண் கோகாய் கூறுகையில், "சுப்ரமணியன்சாமியின் கருத்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவு படுத்துவதாக உள்ளது. எனவே இது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
 
தொடர்ந்து அவர் இதுபோல் பேசினால், அவர் அசாமுக்குள் நுழைய தடை விதிப்போம். சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சுப்ரமணின்யசாமி மீது பாஜக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது?" என்று குறிப்பிட்டார்.
 
இந்நிலையில் சுப்ரமணியன்சாமியின் பேச்சு குறித்து சத்ரா முக்தி சங்கிராம் சமிதி என்ற அமைப்பு அளித்த புகாரின்பேரில் அவருக்கு எதிராக கவுகாத்தி லட்டாசில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.