வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2016 (15:40 IST)

மாணவனை கண்டித்த ஆசிரியரை வெளுத்து வாங்கிய தந்தை

உத்தரபிரதேசத்தில் மாணவனை கண்டித்ததால் பள்ளி ஆசிரியர் ஒருவரை அந்த மாணவனின் தந்தை அடித்து, உதைத்து, துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மணிஷ் குமார் திரிபாதி என்பவர் உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரில் நர்சிங் யாதவ் கல்வி நிறுவனத்தில் 9-ஆம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த வகுப்பில் படிக்கும் குல்ஷன் குமார் என்ற மாணவன் சக மாணவன் ஒருவனின் சைக்கிளை திருடியதற்காக கண்டித்துள்ளார்.
 
இதனையடுத்து குல்ஷன் குமார் தனது தந்தையுடன் வந்து நியாயம் கேட்டுள்ளான். அப்போது மாணவனின் தந்தை உள்ளிட்ட அவருடன் வந்தவர்கள் ஆசிரியரை திடீரென தாக்க தொடங்கினர்.
 
ஆசிரியரை சரமாரியாக அடித்து, உதைத்ததோடு அதனை தடுக்க வந்த அனைவரையும் தாக்கினர். கூட்டம் அதிகமானதால் திடீரென அவர்கள் கொண்டு வந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
 
இந்த சம்பவம் குறித்து நர்சிங் யாதவ் கல்வி நிறுவன முதல்வர் சந்திர பிரகாஷ் யாதவ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் அவனது தந்தை மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.