1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 2 மே 2016 (18:53 IST)

இந்த நிலையை நினைத்தால் எனக்கு அழுகை வருகிறது - ஷாருக் கான் ஆதங்கம்

நான் தேசப்பற்றாளன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று எண்ணும்போது எனக்கு அழுகை வருகிறது என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 

 
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்தியா டிவியின் ’ஆப் கி அதாலத்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”நான் சில நேரங்களில் மிகவும் வருத்தப்படுகிறேன். நான் இந்த நாட்டை சேர்ந்தவன் என்று சொல்ல வைக்கப்படுகிற நிலை வருவதை எண்ணி எனக்கு அழுகை வருகிறது.
 
நான் தேச பக்தன். ஒவ்வொரு நேரத்திலும் நான் தேச பக்தன் என்று விளக்க வேண்டி வருகிறபோது மிகுந்த வருத்தம் அடைகிறேன்.
 
நான் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், சகிப்புத்தன்மையுடன் செயல்பட வேண்டும். சந்தோஷமாக இருங்கள், கடினமாக உழையுங்கள், அவ்வாறு செய்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள்.
 
நான் கடைசியாக மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டில் என்னை விட தேசபக்தி உள்ளவர் யாரும் கிடையாது. மதம், ஜாதி, நிறம் உள்ளிட்டவற்றில் சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொள்ளாதீர்கள் என்று தான் இளைஞர்களிடம் கூறி வருகிறேன்.
 
பிரதமர் மோடி எனக்கு காங்கிரசில் சில நண்பர்கள் இருக்கின்றனர் என்று கூறுவதன் மூலம் எனக்கு அரசியல் முத்திரை குத்த முயல்கிறார். எப்படி இது போன்ற முத்திரை குத்த முடிகிறது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். என் தந்தை தனது இளம் வயதில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்.
 
இந்த சிறந்த நாட்டில் இருந்து அனைத்தையும் பெற்ற நான் எப்படி நாட்டை பற்றி புகார் தெரிவிப்பேன். நான் ஒருபோதும் குறை கூற மாட்டேன். உலகின் சிறந்த நாட்டில், அழகான நாட்டில் வாழும் நாம் நல்லதையே நினைக்க வேண்டும். நாம் உலகின் மிகவும் அழகான, பாதுகாப்பான நாடுகளில் ஒன்றில் வசித்து வருகிறோம். அப்படி இருக்கையில் சிறு சிறு விஷயங்களில் முடங்கிவிடக் கூடாது.
 
எனது குடும்பமே ஒரு குட்டி இந்தியா தான். என் மனைவி கௌரி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லீம், என் 3 குழந்தைகள் மூன்று மதங்களை பின்பற்றுகிறார்கள். அப்படி இருக்கையில் என் நாட்டை பற்றி நான் எப்படி குறைவாக நினைக்க முடியும்?” என்று கூறியுள்ளார்.