வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 11 ஜூன் 2014 (17:25 IST)

சரத் பவார் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தைப் போல பேசுகிறார் - உத்தவ் தாக்கரே கடும் தாக்கு!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சரத் பவார் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தைப் போல பேசுகிறார் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், மராட்டிய மன்னர் சிவாஜிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஒரு ஐ.டி. துறை ஊழியர் வெளியிட்டிருந்த கருத்து, சங்பரிவார் அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த கருத்தை வெளியிட்ட நபர் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் சங்பரிவார் கும்பலால் நடுரோட்டில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார்.
 
இந்த படுகொலை தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்திருந்த சரத் பவார், "மோடி தலைமையிலான அரசு ஆட்சி, அதிகாரத்துக்கு வந்த 15 நாட்களில் நாடு முழுவதும் மதவாத காய்ச்சல் பரவி வருகிறது. இதைப்போன்ற மதவாத சக்திகள் மீண்டும் தலைதூக்க தொடங்கிவிட்டன" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
 
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'-வில் தலையங்கக் கட்டுரை தீட்டியுள்ள உத்தவ் தாக்கரே, "நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோற்ற பின்னர், எப்போது, எதைப் பேசுவார்? என்று யூகிக்க முடியாத நிலைக்கு சரத் பவார் தள்ளப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் மோடியின் அரசுக்கும் என்ன தொடர்பு உள்ளது?; சரத் பவார் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தைப் போல பேசி வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.