வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 17 ஜூலை 2014 (19:06 IST)

நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வழக்கில் நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பிடதியில் அமைந்துள்ள நித்தியானந்தா தியானபீடத்தில் நடிகை ரஞ்சிதாபுடன் ஆபாசமாக நடந்து கொண்டதாக பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி ராமநகரம் மாவட்ட நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக ராமநகரம் மாவட்ட நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புகளுக்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்திருந்த 4 மனுக்களைவிசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஆண்மை பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை செய்ய, சிஐடி விசாரணை நடத்த இடைக்கால தடைவிதித்திருந்தது.

இந்நிலையில், நித்தியானந்தா தாக்கல் செய்த 4 மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆண்மை பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை நடத்துவதற்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி நித்தியானந்தாவின் 4 மனுக்களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஜூலை 28 ஆம் தேதி நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்துமாறும், இந்த வழக்கு விசாரணைக்கு நித்தியானந்தா ஒத்துழைக்காவிட்டால் தங்கள் வசம் எடுத்துக்கொண்டு விசாரணை நடத்துமாறு காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.