உணவகங்களில் சேவைக்கட்டணம்; விரும்பினால் கொடுக்கலாம் - மத்திய அரசு அதிரடி
ஹோட்டல் மற்றும் உணவகங்களில் சேவைக் கட்டணங்கள் செலுத்துவது கட்டாயமல்ல என்றும், விரும்பினால் கொடுக்கலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொதுவாக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் நாம் சாப்பிட்டும் போது, அதற்குரிய தொகையோடு குறிப்பிட்ட சதவீதம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது நாம் விரும்பிக் கொடுக்கும் ’டிப்ஸ்’-ற்கு பதிலாக, பில் தொகையில் 5 முதல் 20 சதவீதம் வரை சேவைக் கட்டணமாக பல இடங்களில் வசூலிக்கப்படுகிறது. எனவே அதை கட்டாயமாக செலுத்த வேண்டிய நிலைக்கு வாடிக்கையாளர்கள் ஆளாவதாக பல்வேறு புகார்கள் மத்திய அரசிற்கு சென்றது.
இதையடுத்து, இதுபற்றி இந்திய ஹோட்டல் சங்கத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டது. அதற்கு பதில் அளித்த ஹோட்டல் சங்கம் “ சேவை கட்டணம் என்பது முழுக்க முழுக்க விருப்பத்தின் அடிப்படையிலானது. வாடிக்கையாளர்களுக்கு சேவையில் திருப்தி இல்லாவிட்டால், அதை ரத்து செய்ய சொல்லலாம்” எனக் கூறியது.
இதையடுத்து மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவு கட்டணம் மீதான சேவை கட்டணம் கட்டாயம் அல்ல. சேவையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இருந்தால் மட்டும் கொடுக்கலாம். இல்லையெனில், சேவை கட்டணத்தை ரத்து செய்யுமாறு அவர்கள் கூறலாம்.
இந்த அறிவிப்பை ஹோட்டல்கள் மற்றும் உணவங்கள், உரிய இடத்தில் எல்லோருக்கும் தெரியும் வகையில் எழுதி வைக்கும்படி, மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.
1986-ம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, வர்த்தக நடவடிக்கைகளில் நியாயமற்ற முறையையோ, ஏமாற்றும் வழிமுறையையோ பின்பற்றினால், அது நியாயமற்ற வர்த்தக நடவடிக்கையாகவே கருதப்படும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நுகர்வோர் அமைப்பில் வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.