வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 27 மார்ச் 2016 (14:31 IST)

செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவர்கள்

உல்லாச வாழ்க்கைக்காக ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.


 

 
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரயில்வே கோடூர் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது, ஒரு காரும், ஆட்டோவும் வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த வாகனங்களை காவல்துறையினர் மடக்கி சோதனையிட்டனர்.
 
இந்த சோதனையில், காரில் செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து கார் மற்றும் ஆட்டோவில் வந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
அவர்களிடம் இருந்து ரூ.19.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கைதான 11 பேரில் 2 பேர் என்ஜினீயரிங் மாணவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களுள் ஒருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் திருப்பதியைச் சேர்ந்தவர். இருவரும் ஹைதராபாத் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 4 ஆம் ஆண்டு படித்து வருபவர்கள்.
 
உல்லாச வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கில் செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டதாக கைதான மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பெரிய ஹோட்டலில் தங்கி உல்லாசம் அனுபவிப்பது, விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, வெளிநாட்டு மதுவை குடிப்பது முதலியவற்றிற்காக தேவையான பணத்தை கடத்தல் மூலம் ஈட்டி வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
 
இது குறித்து அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.