வங்கியில் எப்போது இயல்பு நிலை திரும்பும்? - ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு
பிப்ரவரி மாத இறுதிக்குள், வங்கி நடைமுறைகளில் இயல்பு நிலை திரும்பும் என, பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
புழக்கத்தில் இருந்து வந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் திரு. நரேந்திர மோடி, கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார்.
இந்த நடவடிக்கையால் நாட்டில் பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. புதிய இரண்டாயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு அச்சடிக்கப்படாததால், வங்கிகளில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள். போதுமான அளவு பணம் வினியோகிக்கப்பட முடியாததால் ATMகளும் 50 நாட்களுக்கு மேலாக முடங்கிக் கிடக்கின்றன. ஒரு சில ATMகள் மட்டுமே செயல்படுகின்றன.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ”பிப்ரவரி மாத இறுதிக்குள், வங்கி நடைமுறைகளில் இயல்பு நிலை திரும்பும் எனவும், வங்கிகளில் இருப்பு அளவு அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.