முதலமைச்சர் தலையை கொண்டு வந்தால் ரூ.1 கோடி - ஆர்.எஸ்.எஸ். விலை
கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக ஆர்.எஸ்.எஸ்., செய்தித் தொடர்பாளர் சந்திரவத் அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதலமைச்சருமான பினராயி விஜயனை மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபாலுக்கு வரக் கூடாது என பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்ஸோடு சேர்ந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தது.
சில நாட்கள் முன்பு கர்நாடாகா மாநிலத்தில் மங்களூரில் மத நல்லிணக்கப் பேரணியில் கலந்துகொள்ள இருந்தபோது அதே ஆர்.எஸ்.எஸ் அதே பாணியில் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி அந்த பேரணியில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், ’போபாலில் நான் பேசக்கூடாது என ஆர்எஸ்எஸ் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த மாநில அரசும் அதற்கு ஆதரவான நிலையையே எடுத்தது. அந்த மாநில அரசே கேட்டுக்கொண்டதால் நான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் நான் அங்கு பேசுவதை தவிர்த்தேன்.
ஆனால் முதல்வராக இல்லாமல் இருந்து ஒரு கம்யூனிஸ்ட் ஊழியராக சென்றிருந்தால் என்னை யாராலும் தடுத்திருக்க முடியாது. அதே போல் இங்கும் (கர்நாடகா) ஆர்எஸ்எஸ் மிரட்டல் விடுத்து வருகிறது.
நான் திடீரென்று ஒருநாள் வானத்தில் இருந்து குதித்து முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தவனல்ல. ஆர்.எஸ்.எஸ்ஸை நேரில் அறியாத நபரல்ல. நன்கு அறிந்துதான் இங்கு வந்திருக்கிறேன்.
இப்போது போலீஸின் பாதுகாப்போடு நடுவே நான் செல்வதாகக் கூறும் நீங்கள், உங்கள் பழைய ஆர்.எஸ்.காரர்களைக் கேளுங்கள். பிரண்ணன் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலத்தில். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கையிலேந்தி நின்ற கத்திகளின் நடுவேதான் பயணித்தேன். அன்று உங்களால் ஒன்றும் செய்ய முடியாதபோது, இப்போது என்ன செய்து விடப் போகிறீர்கள்’ என பேசியிருந்தார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சந்திரவத் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தலையை கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும். அந்த பரிசுத் தொகைக்காக எனது சொத்து முழுவதையும் விற்றுகூட அதனை அளிப்பேன் என பேசியிருக்கிறார்.