ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2016 (05:16 IST)

ஏழை பெண் தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு

பெண்கள் நலத்திட்டங்களுக்காக பினராய் விஜயன் அறிமுகப்படுத்தப்பட்ட லாட்டரியை வாங்கிய ஏழை பெண்ணிற்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது.


 


கேரள மாநில அரசு சார்பில் காருண்யா பாக்யஸ்ரீ, காருண்யா பாக்யலெட்சுமி ஆகிய 2 லாட்டரிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பதவியேற்ற பிறகு பெண்கள் நலத்திட்டங்களுக்காக புதியதாக காருண்யா ஸ்ரீசக்தி என்ற லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.50 விலை கொண்ட இந்த லாட்டரி சீட்டின் முதல் பரிசு ரூ.1 கோடி என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த லாட்டரி சீட்டு சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. அதிகளவில் இந்த லாட்டரி சீட்டு விற்பனையானது. இதன் பரிசு குலுக்கல் நடந்ததில் முதல் பரிசான ரூ.1 கோடி ரபீஷா பீவி  என்ற ரப்பர் பால் வெட்டும் ஏழை பெண்ணுக்கு கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த ரபீஷா அப்பா ஏற்கனவே இறந்து விட்டதால் அவரது தாய் தான் 3 மகள்களையும் ரப்பர் பால் வெட்டி காப்பாற்றி வந்தார். மிகவும் சிரமப்பட்டு மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார். 2-வது மகளான ரபீஷா பீவிக்கு 37 வயதான நிலையிலும் ஏழ்மையின் காரணமாக திருமணம் நடைபெறவில்லை.

அந்த லாட்டரி சீட்டு ஆற்றிங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கடையில் விற்பனையாகி உள்ளது. அந்த கடைக்காரர் தன்னிடம் லாட்டரி சீட்டு வாங்கி செல்பவர்களின் முகவரி மற்றும் போன் நம்பரை வாங்கி வைத்திருந்ததால் அவர்தான் முதல் பரிசு விழுந்த விவரத்தை ரபீஷா பீவிக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து ரபீஷா பீவி கூறுகையில், “மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எனக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளதை இறைவன் கொடுத்த கொடையாக கருதுகிறேன். எங்களுக்கென்று சொந்தமாக ஒன்றுமே கிடையாது. எனவே பரிசு பணத்தில் சொந்த வீடு கட்டுவேன். ஏழைகளுக்கும் உதவி செய்வேன். ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு தொடர்ந்து செல்வேன்.” என்றார்.