ரூபாய் நாட்டு மாற்றத்தால் நாட்டில் கலவரம் வெடிக்கலாம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
ரூபாய் நாட்டு மாற்றம் விவகாரத்தில் நாட்டில் கலவரம் வெடிக்கலாம் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அதிரடியாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில்லரை தட்டுபாடு ஏற்பட்டு சிறு, குறு வணிகர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் கிராம்ப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டது.
அனைத்து வழக்குகள் மீதான விசாரணைகளுக்கும் தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்த மனுவை விசரித்த நீதிபதிகள் கூறியதாவது:-
பொதுமக்கள் பணத்துக்கு அலைவது வேதனையைத் தருகிறது. மக்கள் தங்கள் சொந்த பணத்தை எடுக்க பல மணிநேரம் காத்திருக்கிறார்கள். நாடு முழுவதும் இந்த பிரச்சனை இருப்பதால்தான் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை தேடி நீதிமன்றத்தின் கதவை தட்டுகின்றனர். எங்களால் நீதிமன்றத்தின் கதவை மூட முடியாது. மக்கள் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கிறார்கள், ஒருவேளை நாட்டில் கலவரம் வெடிக்கலாம், என்றனர்.