அந்த காலத்துல அப்படி இருந்த ஏர்லைன்ஸ்.. திரும்ப மாத்துவோம்! – ரத்தன் டாடா மகிழ்ச்சி ட்வீட்!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா மீண்டும் டாடா வசம் சென்றுள்ள நிலையில் ரத்தன் டாடா மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான சேவைகளை வழங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் அதன் கடன் தொகை ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. இதனால் நஷ்டத்தில் இருந்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த ஏலத்தில் பல நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதியாக ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த 68 ஆண்டுகளுக்கு முன்னர் டாடாவிடம் இருந்த ஏர்லைன்ஸைதான் மத்திய அரசு அரசுடமையாக்கி ஏர் இந்தியா நிறுவனமாக மாற்றியது. இந்நிலையில் மீண்டும் ஏர் இந்தியா டாடா குழுமம் வசமே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுகுறித்து வெல்கம் பேக் ஏர் இந்தியா என பதிவிட்டுள்ள ரத்தன் டாடா “ஏவியேஷன் துறையில் டாடா தனது தடத்தை பதிக்க ஏர் இந்தியா ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். முன்னதாக ஜே.ஆர்.டி டாடா காலத்தில் உலகத்தின் பிரபலமான விமான சேவையாக இது இருந்தது. மீண்டும் அந்த நிலைக்கு உயர்த்த பாடுபடுவோம். ஜே.ஆர்.டி டாடா இன்று இருந்திருந்தால் மிக்க மகிழ்ந்திருப்பார். இந்த நிறுவனத்தை எங்களுக்கு அளித்த அரசுக்கு நன்றி” என கூறியுள்ளார்.