வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 8 அக்டோபர் 2014 (16:13 IST)

மோடி இந்தியாவின் பிரதமரா? அல்லது குஜராத் பிரதமரா? என்று தெரியவில்லை - ராஜ்தாக்கரே

நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகும்கூட குஜராத் முதல்வர் போலவே நடந்து கொள்வதாக மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே குற்றம்சாட்டினார்.
 
கடந்த மக்களவை தேர்தலில் நரேந்திர மோடியை ஆதரித்த ராஜ்தாக்கரே, 15 ஆம் தேதி நடக்கவிருக்கும் மஹாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டுள்ளார். மும்பையில் நடந்த பேரணி ஒன்றில் ராஜ்தாக்கரே பேசியதாவது: நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமராகி இருக்கிறார். ஆனால், இன்னும்கூட குஜராத் முதல்வர் போலவே நடந்து கொள்கிறார். மோடி அமெரிக்கா சென்றதற்காக பெருமைப்படுகிறோம். ஆனால், அவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரவேற்றபோது ’கெம் சோ’ என்று குஜராத் மொழியில் வரவேற்றதற்கு பதிலாக இந்தியில் வரவேற்று இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்போம். மோடி இந்தியாவின் பிரதமரா? அல்லது குஜராத் பிரதமரா? என்று தெரியவில்லை. 
 
இந்தியாவின் முதலாவது புல்லட் ரயில் மும்பைஅகமதாபாத் இடையேதான் ஓட வேண்டுமா? நாட்டின் வேறு பகுதியில் ஓடக்கூடாதா? மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதும் மகாராஷ்டிராவில் அமைக்கப்படவிருந்த கடலோர பாதுகாப்பு படையின் பயிற்சி மையம் குஜராத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.  குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் சில நாட்களுக்கு முன்பு மும்பை தொழிலதிபர்களிடம், மும்பையில் ஏன் முதலீடு செய்கிறீர்கள்? குஜராத் மாநிலத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயத்தில் மகாராஷ்டிராவுக்கு மோடி வரும்போது வளர்ச்சி பற்றி பேசுகிறார். உண்மையில் இங்கு என்னதான் நடக்கிறது? 
 
மும்பையில் பிரசாரம் செய்யும் பா.ஜ கட்சியினர் குஜராத் மொழியில் பேனர் வைக்கிறார்கள். மகாராஷ்டிராவில் பா.ஜவுக்கு என்று எந்த முகமும் கிடையாது. எனவேதான் பேனர்கள் அனைத்திலும் மோடியின் படத்தை பயன்படுத்துகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் தங்கள் சொந்த குடும்பத்துக்கு அதிகாரம் வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இவ்வாறு ராஜ்தாக்கரே பேசினார்.