1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 11 மே 2015 (11:23 IST)

மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் ராமர் கோவில் கட்ட சட்டமியற்ற இயலாது - ராஜ்நாத் சிங்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற இயலாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
 
உத்தரப் பிரதேச மாநிலம், விசுவ இந்து பரிஷித் சார்பில் அயோத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஞாயிற்றுக்கிழமை வந்த ராஜ்நாத் சிங், இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
 
கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுவது தொடர்பான கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.
 
மக்களவையில் பாஜக பெரும்பான்மை பெற்றிருந்த போதிலும், மாநிலங்களவையில் பாஜகவிற்கு போதுமான பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லை. ஆகையால், இந்த ஆட்சியின்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் பாஜகவால் கொண்டு வர இயலாது' என்றார்.
 
மேலும், அயோத்தியில் ராமர் கோயில் சம்பந்தமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம் என்றார்.
 
மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்ததும், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சட்டம் கொண்டு வரப்படுமா? என ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் மீண்டும் கேள்வியெழுப்பினர். அதற்கு, "இது கற்பனையான கேள்வியாகும்' என்றார்.
 
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொடர்பான கேள்விக்கு ராஜ்நாத் சிங் பதிலளிக்கையில், "நாடாளுமன்றத்தில் அதுதொடர்பாக ஒரிரு நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறேன்' என்றார்.