1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (08:41 IST)

ஒரே நாளில் மறைந்த இரண்டு பெண் பிரபலங்கள்: பெண் இனத்திற்கே பேரிழப்பு!

நேற்று ஒரே நாளில் ஒய்ஜி மகேந்திரனின் தாயாரும் பிரபல கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி மற்றும் முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகிய இரண்டு பெண் பிரபலங்கள் மறைந்தது பெண்ணினத்திற்கே பேரிழப்பாகக் கருதப்படுகிறது 
 
நேற்று மதியம் சினிமா மற்றும் நாடக நடிகரான ஒய்.ஜி. மகேந்திரனின் தாயாரும் சென்னையின் பிரபல பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளியை தொடங்கியவருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி மறைந்தார். இவர் ஒரு சிறந்த கல்வியாளர் மட்டுமன்றி ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குமுதம் மற்றும் இந்து நாளிதழில் தனது பணியை இவர் ஆற்றியுள்ளார். இவரது மறைவு தமிழகத்தின் பெண் இனத்திற்கே ஒரு பேரிழப்பு என பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
 
இந்த நிலையில் ஒரு மிகச்சிறந்த பெண்மணியை தமிழகம் இழந்து தவித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு மற்றொரு பெண் பிரபலமான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் மறைந்த செய்தி வெளிவந்தது பெரும் பேரிடியாக விளங்கியது. 18 வயதில் அரசியலில் நுழைந்து, 25 வயதில் எம்எல்ஏ மற்றும் அமைச்சராகி தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளிலும், பாஜகவின் முக்கிய பதவிகளையும் வகித்த சுஷ்மா சுவராஜின் மறைவு பாஜகவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கே பேரிழப்பு என்று கருதப்படுகிறது. எதிர்க் கட்சி தலைவர்களிடம் அன்பு செலுத்தி அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிய பெண் தலைவரான சுஷ்மா சுவராஜின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று ஒரே நாளில் இந்தியாவின் இரண்டு பெண் பிரபலங்களான ராஜலட்சுமி பார்த்தசாரதி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரின் மறைவு பெண்ணினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகக் கருதப்படுகிறது இவர்களது ஆன்மா சாந்தி அடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்