இயற்கையோடு இணைந்து வாழ்வது முக்கியம்! – தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் குழுவுக்கு பிரதமர் வாழ்த்து!
95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த குறும் ஆவணப்படத்திற்காக விருது வென்ற தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் குழுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று நடந்து முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா முந்தைய விருதுகளை விட மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக அமைந்தது. ஒரு பக்கம் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருது பெறுமா என்ற எதிர்பார்ப்புக்கு நடுவே சத்தமே இல்லாமல் விருதை வென்றுள்ளது தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற இந்திய ஆவணப்படம். இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் சரணாலயத்தின் அருகே வசிக்கும் தமிழ் பழங்குடி தம்பதிகளின் கதை என்பது கூடுதல் சிறப்பு.
தாயை பிரிந்து சின்ன குட்டிகளாக கொண்டு வரப்பட்ட ரகு மற்றும் பொம்மி என்ற இரு யானைக்குட்டிகளை பழங்குடி தம்பதியரான பொம்மன் மற்றும் பெள்ளி எப்படி பராமரித்து வளர்த்தார்கள் என்பதை இந்த 47 நிமிட குறும் ஆவணப்படம் உலகிற்கு காட்டியுள்ளது. இதை இயக்கிய பெண் இயக்குனரான கர்த்திகி கான்சால்வெஸ் ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
இதுகுறித்து படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “ஆஸ்கர் வென்ற கார்த்திகி, குனீத் மோங்கா ஆகியோருக்கு வாழ்த்துகள். நிலையான வளர்ச்சி மற்றும் இயற்கையோடு இணைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை இந்த ஆவணப்படம் காட்டுகிறது” என்று வாழ்த்தியுள்ளார். முதுமலை தம்பதிகள் தொடர்பான இந்த ஆவணப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
Edit by Prasanth.K