ரயில் டிக்கெட் கட்டணம் செலுத்த கால அவகாசம்; ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடி சலுகை
ஐ.ஆர்.சி.டி.சி சேவையை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் உடனடியாக பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மும்பையை சேர்ந்த ஃபிண்டெக் நிறுவனத்துடன் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சலுகை கீழ் முன்பதிவு செய்யும் போது கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. கட்டணம் செலுத்த 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்த ePayLater சேவை மூலம் பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது கட்டணம் செலுத்தும் வேளையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் இந்த புதிய சலுகை மூலம் இனி எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
இந்த சலுகை பெற ஆதார் அல்லது பான் அட்டை எண் கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பணம் செலுத்த தவறும் பயணிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.